Popular Posts

Saturday, October 30, 2010

சும்மா பாடுங்க..

அன்பு கொண்ட மனிதருக்கு
உடம்பில் கொம்பு முளைக்குதா?

ஆசை கொண்டு பேசும் போது
காசு வந்து குவியுதா?

சந்தையிலே சரக்கு வந்து
மந்தையாக இருக்குதா?

சாதிமதம் பார்க்காமத் தான்
வாங்கிப் போக முடியுதா?

என்பு போர்த்த உடலுக்குள்ளே
 குறை  இருக்கு தெரியுதா?
.........................................................
பழகிச் சொல்லும் போது தானே
பகையும் வந்து சேருது?

ஊனமெல்லாம் உடலில் இருந்து
மனது நோக வைக்குது?

தானம் கொடுத்து வாழ்ந்த
நமது பரம்பரையும் அழுவுது?

சுயநலத்தில் வாழ்வும் தான்
இருந்து கொண்டு துடிக்குது?

பொதுநலத்தில் புதிய வாழ்வு
விடியவும் தான் ஏங்குது?

சுயநலமா? பொதுநலமா?
எந்தநலம் தெரியலே?

சமூகத்தின் விடுதலைக்கு
சத்தியந்தான் பொதுநிலை?
..............................................................
உலகமயம் எதிர்த்து நிற்க
மார்க்சியம் தான் கடைநிலை?

புரிந்து கொண்டால் நமக்கில்லை
வாழ்க்கையிலே இடைநிலை?

வறுமை எனும் பேய் ஒழிய
சமத்துவமே விடுதலை?

பேதமற்று வாழ்ந்திடத்தான்
பாதை மெல்ல மாறணும்?

நமக்கு....
எதுவும் சாத்தியமே என்றுசொல்லி
வாழும் வாழ்க்கை முதல் நிலை?

                                        

குழந்தைப் பாடல்

சின்ன விதை விதைத்துமே
பெரிய மரத்தைப் பார்க்கலாம்
மண்ணுக்குரிய தரத்திலே
மரத்தின் செழிப்பை ரசிக்கலாம்!

நட்டு வைத்த விதையிலும்
நல்ல செடியும் முளைக்கலாம்
 கெட்டுப் போன மண்ணிலும்
விதையும் கருகி சாகலாம்! 

பச்சைநிறத்தில் பாசமும்
இச்சை கொள்ள வைக்குமே
மொட்டுப் பூவும் சிரித்துமே
மனதில் மகிழ்ச்சி பூக்குமே!

வானம் மழையைத் தூவிட
கானம் கூவி அழைக்குது
விலங்குக் கூட்டம் யாவையும்
வெளியில் வந்து திரியுது!

மனது மட்டும் இருக்கணும்
முடிந்த மட்டும் வளர்க்கணும்
கனவு வென்று சிரித்திட
நனவுக் காடும் மலரணும்!

மேகம் சிரித்து வாழவும் 
காடும் செழித்து வளரணும்
தாகம் தீர்க்க உதவிடும்
தண்ணீர் அதுவும்  தந்திடும்!

குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியும்
குழந்தை வளர்ப்பில் நிச்சயம்
உலக வாழ்வின் மகிழ்ச்சியும்
உயிர்க் காடுகளில் சாத்தியம்!

மரம் வளர்த்து வாழ்ந்துமே
மனித குலத்தை நேசிப்போம்
மறம் வளர்த்து வாழவும்
அன்னை பூமியை வாசிப்போம்!

குழந்தைப் பாடல்

கலைஞன் என்ற பெயரிலே

கல்லை வணங்க வைத்திடும்

அரிய கலையைச் செய்திடும்

 அழகு சிற்பி நான் தானே!


அன்பு மழையில் நனைந்தாலே

அழகு சிலையும் பிறந்திடும்

கனவு கண்டு வடித்திடும்

சிலையும் நனவா கிடும்!


வலிகள் யாவும் புன்னகை

அதற்கு உளிகலுமே பேரிகை

களிபொங்கும் வாழ்விலே

கலையும் நிலைத்து நிற்குமே!


கண் திறந்த பின்னரே

சிலையின் அழகு சிரித்திடும்

பொன்ன கையும்  இன்றியே

புன்னகையும் பிறந்திடும்!


கல்லும் சிலையான பின்

கண்டு வணங்கி சிரிக்கிறேன்

மெல்ல மெல்ல சிற்பி நான்

சிலைகள் கண்டு ரசிக்கிறேன்!

Friday, October 29, 2010

புரிசை கூத்து திருவிழா-2010

புரிசை கூத்துத் திருவிழா-2010

புரிசை கூத்துத் திருவிழா-2010

கொம்பிலே பழம் பழுத்துத்
தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம் மயங்கி
பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம் போட்டு
ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திகிட்டுப் பாடுறதும்
கலை..கலை..கலை!
                                    பட்டுக்கோட்டையார்.

      மனித சமுதாயத்தின் கூட்டு முயற்சியாகப் பரிணமித்த நாட்டுப்புறக் கலைகள் பழமையின்,பண்பாட்டின் சின்னமாக விளங்கி மனித குலத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்குகிறது.பல்வேறு நாட்டுப்புறக் கலைவடிவங்களில் இன்னமும் கிராமங்கள் தோறும் வாழவைத்துக் கொண்டிருக்கும் கூத்துக் கலைக்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ளது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையில் இருக்கும் புரிசை எனும் கிராமம் ஆகும்.
          கூத்துக் கலையை உலகத்தின் பல முனைகளுக்கு சென்று சொல்லியும்,நடத்தியும் காட்டி இக்கலைக்குப் பெருமை சேர்த்த புரிசை கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் அவர்களின்  7-ம் ஆண்டு நினைவாக அக்டோபர்22,23,24-2010 ஆகிய 3 நாட்களும் புரிசை மண்ணில் கலை வாசம் மணக்க மண் வாசம் மாறிய நாட்களாகும்.ஆண்டு தோறும் நடக்கும் இக்கூத்துத் திருவிழாவில் அந்நிய நாட்டினர்,திரைக் கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பல்வேறு கூத்து மன்றங்கள்,குழந்தைகள் முதல் அறிஞர்கள் வரை கலந்து கொண்டு சீரிளமையாக இவ்விழாவை சிறப்பித்து வருகின்றனர்.விழா எனும் திறந்த வாசல் வழியே தான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும்.கலைகளின் வளர்ச்சிக்கே விழாக்கள் தான் மூல காரணம் எனும் தாகூரின் வார்த்தைகள் கூத்துக்கலை நிகழ்த்தும் புரிசை மண்ணுக்குப் பொருத்தமானதே!
              வைகறை இசைக்குழுவின் கிராமிய மணம் கமழும் பாடல்களோடு தொடங்கிய நிகழ்வு 3 நாட்களும் பல்வேறு நாடகங்களின் களமானது.சத்யலீலா,கைசிகபுராணம்,கி.ரா.கொழம்பு,லவ் பண்ணுங்கோ சார்,அனுமன் தூது,அரவான் களப்பலி,குதிரைமுட்டை,சென்னைக்கலைக்குழுவின் கொக்கரிப்பு,கோவில்பட்டி மணல் மகுடி நாடகக்குழுவின் மிருகவிதூஷகம்,சுந்தரிகல்யாணமெனும் கூத்துக்களும்,நவீன,வீதி நாடகங்களும்,மக்கள் திரளை கலக்கவும்,சிரிக்கவும் வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.
              பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் விளக்கெண்ணெய் தடவிய மரக்கம்பத்தில் சிறுவர் முதல் இளைஞர்கள் வரையிலும் ஏறி உச்சத்தில் ஆடிய ஆட்டங்கள் அனைவரையும் அசரவைத்தது.கயிற்றில் நடந்து செல்லும் சாகஸத்திலும் இந்த சாகஸம் சாதனை என்றே சொல்லலாம்.மல்லர்கம்பத்தில் ஏறிவிளையாடிய அந்தக் கண்மணிகளைப் பாராட்டியேயாக வேண்டும்.லிம்போகேசவனின் தீ நடனமும்,நாலு கால் நடனமும் நிகழ்ச்சிக்குச் சூடேற்றியது.
    கோயிலுக்கான குறியீடாக விழாக்கள் இருந்தன என்றால் கூத்துக்கலையின் வளர்ப்புப் பண்ணையாக புரிசை விளங்குகிறது எனலாம்.சிறுவர் முதல் பெரியவர்கள்,பேராசிரியர்கள்,படித்தவர்கள்,படிக்காதவர்களென அனைவருக்கும் கூத்துக்கலை சொல்லித்தரும் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் படித்து வளர்ந்து வரும் கலைஞர்கள் ஏராளம்.நெஞ்சை அள்ளி நெகிழ்ச்சியூட்டிய இவ்விழாவில் கூத்தோடு கரைந்துபோன மூத்த தெருக்கூத்துக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கூத்துக்கலையை உயர்த்திப் பிடித்திருக்கிறது புரிசை மண்!இதோடன்றி சங்கீத நாடக அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற கலைஞர்கள் மு.பழனி,நெல்லை மணிகண்டன் ஆகியோரையும் பாராட்டி கெளரவித்தது.
                உலகமயம் எந்த நாட்டுக்கும் பொன்னாபரணமல்ல.அலுமினியப் பிச்சைப் பாத்திரம் தான் என்பதை ஓங்கி அறைந்தன நாடகங்கள்.இந்திய மண்ணுக்கான எழில் வளம்,கலை வளம்,இயற்கை மற்றும் செல்வ வளங்களையும்சுண்டி இழுக்கும்,சுரண்டும் கொள்கையாகவே இருக்கிறது என்பதையும்,அதற்கு அகில உலக முதலாளிகள் சங்கம் எடுபிடியாகி தேசத்திற்கு செய்யும் துரோகம் பாமர மக்களையும் சிந்திக்க வைத்தது.உலகமயத்திற்கு எதிராக மக்களின் ஆற்றலை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தையும் நெத்தியடியாகச் சொன்னது கொக்கரிப்பு!மதங்கள் எதுவும் மனிதர்களுக்குச் சோறு போடாது என்பதை சத்யலீலா நாடகமும்,தாய் மண் அழிந்து வருவதை எச்சரித்துச்  சொன்ன மிருக விதூஷகம் தேசத்தின் சுதந்திரக்காற்றுக்கு வந்த ஆபத்தினை அழுத்தமாய்ப் பதிய வைத்தது.கோயில் விழாக்களில் முழங்கி வந்த கலைகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியவரும் அதை நாடறியச் செய்தவருமான கலவாணர் என்.எஸ்.கே வழியில் சமூகத்திற்கான நாடகங்களை  மக்களுக்குச் சொல்லி சிந்திக்க வைக்கும் புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்,மற்றும்தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
        கலாச்சார,பண்பாட்டு ஒருமைப்பாட்டுணர்வைக் கூத்துகலை மூலம் மனித குலத்துக்குச் சொல்லும் புரிசை மண்ணில் கூத்துக்கலை கற்க அனைவருக்கும் வாய்ப்புள்ளதை இன்னும் அதிகம் பேர் அறியாமலே இருக்கிறார்கள் என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது .3 நாட்களும் கலைத்தவத்தோடு இருந்த புரிசை மண் சுந்தரி கல்யாணத்தை முடித்தே தவத்தைக் கலைத்துக் கொண்டது.இந்த 3 நாள் கூத்து விழா கற்றுத்தந்ததும், சொல்லித்தந்ததும் ஏராளம்..ஏராளம்!பழமையின் அடிச்சுவட்டிலிருந்து பூட்ஸ் கால்கள் வரையிலும் கற்றுக்கொள்ளவேண்டிய நாகரீகங்களும்,அடவுகளும்,அதிசயங்களும் நம் அனைவரின் மூளையிலும் இன்னும் பிராண்டிக் கொண்டே இருக்கின்றன.விழா குறித்து சுபோ ஜெயம் சொல்வதற்கு முன் இக்கூத்து விழாவை ஆண்டு தோறும் சாத்தியமாக்கிவரும் கூத்து இயக்கவாதிகளும் கலஞர்களுமான புரிசை கண்ணப்பசம்பந்தன்,கண்ணப்ப காசி,சங்கர் ஆகியோரின் பெரும் பங்கை மறக்க முடியாது.பாராட்டியேயாக வேண்டும்.
            கூத்துகலைக்கோர் குற்றாலமாக இருக்கும் புரிசை மண்ணில் ஆண்டு தோறும் நடக்கும் நீர்வீழ்ச்சித்திருவிழாவில் எங்கிருந்தும் கலைப்பறைவைகள் வந்து,தங்கி,சிறகு விரித்து ஆடும் நடனங்களும்,நாட்டியங்களும்,அடவுகளும் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும் தான்!இறுதியாக..
                 “கூத்துத் தவத்தில்-இவர்கள்
காத்திரமானவர்கள்-புரிசை இவர்களை
அடைகாத்து வைத்திருக்கிறது,
கனவை நனவாக்கும் புரிசை மண்ணுக்கு
நாமும் கலைஞர்கள் அனைவரும் தோள் கொடுப்போம்!”
    கூத்துப் பல்கலைக்கழகம் ஒன்று புரிசையில் துவக்க தமிழக அரசை வலியுறுத்திக் கோரிக்கையும் வைப்போம்!
.

Monday, October 25, 2010

ஹைக்கூ

ஊர்ந்து சென்று
உயிர் வளர்த்தது
வேர்.

தாரை தப்பட்டையுடன்
பூமிக்கு வந்தது
மழை.

காய்தல் தீது
நனைதல் நன்று
மீன் வலை.

எலிகள் காத்திருந்தன
அறுவடை வயலெங்கும்
வலைகள்.

உயிர்க்கருவுக்கு
எடுத்தனர் விழா
வளை காப்பு.

இழையில் பின்னியது
குடியிருக்கும் வீடு
சிலந்தி.

வானத்து இடிமுழக்கம்
ஒன்று சேர்ந்து கேட்டன
திசைகள்.

மத்தாப்பு ஒளியில்
நனைந்து கொண்டிருக்கிறது
காதல்.

வற்றாத ஜீவநதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நாக்கு.

குழைந்தைக்கு இனித்தது
வான் நிலா
தேன் பலா.

முள் தைத்தும்
வலிக்காமல் ஓடுகிறது
நதி.

முள்ளோடு
வாழ்கிறது
மீன்.

Sunday, October 24, 2010

புரிசை கூத்து2010

புரிசைகூத்து2010-விழா

 செய்யாறு,அக்டோபர்24,புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரை
தெருக்கூத்து மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூர்,இணைந்து
நடத்திய தெருக்கூத்துவிழா 3நாள் நிகழ்வு22.10.2010 அன்று
தொடங்கியது.இதில் கலைமாமணீ கண்ணப்பதம்பிரான் ஏழாம் ஆண்டு நினைவு
நாடகக்கலைவிழா, கலைமாமணி கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர்
விருது வழங்கும் விழா மற்றும்சங்கீத நாடக அகாதமியின் யுவபுரஸ்கர்
விருதுபெற்றவர்களை சிறப்பிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா
ஆர்.லட்சுமணன் ஊரட்சிமன்ற தலைவர் புரிசை தலைமையில் நடைபெற்றது.நிகழ்வு
வைகறை இசைக்குழுவின் கிராமப்புறப் பாடல் நிகழ்வுடன்
துவங்கியது.கே.எஸ்.கருணாபிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.வாழ்த்தியும்
நிகழ்வை ஒருங்கிணைத்தும் ஆர்.லோகநாதன்,செய்யாறு ஐடிஐ தாளாளர் அவர்கள்
பேசினார்.சத்ய லீலா,மல்லர் கம்பம்,கைசிக புராணம்,கி.ரா.கொழம்பு,அனுமன்
தூது அரவாண் களப்பலி ஆகிய நாடகங்கள் நடைபெற்றது. மறுநாள் 23.10.2010அன்று
பிற்பகல் தெருக்கூத்து முக ஒப்பனைப் பயிற்சி முகாம்
நடைபெற்றது.இரவில்சென்னை கலைக்குழுவின் கொக்கரிப்பு,லவ் பண்ணுங்க
சார்,குதிரைமுட்டை,முருகபூபதியின் மிருகவிதூஷகம்,ஆகிய
நாடகங்களும்,தீநடனம்,நாலுகால் நடனம் ,அரவாண் களப்பலி நாடகமும்
நடைபெற்றது.மற்றும் கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருதுமூத்த
தெருக்கூத்துக்கலைஞரும்,கலைமாமணி விருது பெற்றவருமான பாவலர் ஓம்
முத்துமாரி அவர்களுக்கு பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழ்த்துறை
,சென்னைப்பல்கலைக்கழகம்,அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
மு.பழனி,நெல்லைமணிகண்டன் ஆகியோர் சங்கீத நாடக அகாதமியின் யுவ புரஸ்கார்
விருது பெற்றதையொட்டிப் பாராட்டு விழாவும் நடைபெற்றது.விருது பெற்றவர்களை
பாராட்டி, பேராசிரியர் செ.ரவீந்திரன் மேனாள்
இலக்கியத்துறைத்தலைவர்,தில்லி பல்கலைக்கழகம்,நாடக
இயக்குனர்பிரளயன்,எழுத்தாளர் ஆரிசன் மாவட்ட செயலாளர் தமுஎகச திருவண்ணாமலை
ஆகியோர் பேசினர். இன்று இரவு மூன்றாம் நாள் நிகழ்வாக சுந்தரி கல்யாணம்
புதிய கூத்து அரங்கேற்றம் நடந்தது.நிகழ்வு ஏற்பாடுகளை
கண்ணப்பகாசி,மற்றும் கலைமாமணி கண்ணப்பசம்பந்தன்,சங்கர் ஆகியோர்
செய்திருந்தனர்.ஸ்ரீராம் நடராசன் இறுதியில் நன்றி கூறினார்.
பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கலைமாமணி கண்ணப்பதம்பிரான் வாழ்நாள் சாதனையாள்ர் விருது பேராசிரியர் வீ.அரசு,தலைவர்,தமிழிலக்கியத்துறை,சென்னைப்பல்கலைக்கழகம் வழங்கியபோது எடுத்த படம்.

Thursday, October 21, 2010

கவிதை

காதுகளுக்கு
அதிர்வுகளைத தரும்
செல்பேசிகளுக்கு..
களைப்பு நீங்க-
தேவையாய் இருக்கிறது..
எப்போதும்..
ரீசார்ஜ்!

ஹைக்கூ

நடந்தான்
சர்க்கரை வியாதிக்காரன்
ரோடு முழுக்க எறும்புகள்!

இனனும் அம்மாவால்
சுட்டுத்தரமுடியாத தோசை
நிலா!

நட்சத்திரங்கள்
பூமிக்கு வர விருப்பம்
இலவச மனைப் பட்டா!
விரிந்த உலகம்
கைக்குள் சுருங்கியது
செல்பேசி!

தவம் கலைத்தன
கழுதைகள்
பசையோடு சுவரொட்டிகள்!

சும்மா பாடுங்க..

உன் கண்கள் காந்தத் தொழிற்சாலை
கனவுகள் வெல்லும் சிறைச்சாலை
என் கண்கள் உனக்கும் பூமாலை
நனவுகள் மலர்ந்திடும் வான்சோலை!

உன் வரவில் இருட்டும் பதுங்கிவிடும்
கண்ணொளி யும் வழியைக் காட்டிவிடும்
கார்முகிலை மினனல் வெட்டிவிடும்
மழை பூமியை வறட்சியும் வாட்டிவிடும்!

பிறந்த மேனியில் உதடுகள் கிள்ளும்
புவியீர்ப்பு விசையில் மனிதம் துள்ளும்
உறைந்துபோக நினைவலை சொல்லும்
என்னை உந்தன் உயிரும் மெல்லும்!

காமன் கையில் கரும்பு வில்லும்
கண்ணயர்ந்து காதல் சொல்லும்
மாமன் எந்தன் மனதில் துள்ளும்
மலர்க்கணையும் உன்னை வெல்லும்!

சுற்றம் சூழ்ந்து திசைவழி காட்ட
சூடிக்கொள்ள பூமணம் வீசும்
குற்றம் புரிய கன்னம் ஏங்க
கூரீட்டியாய் கண்கள் மாறும்!

வியர்வை நீரும் உப்பாய்க் கரையும்
விரும்பிய வரையும் கடலும் சுரக்கும்
கனவுத்தேரும் ஊர்வலம் போகும்
மனது முழுக்க அன்பில் தோயும்!

வேதம் நான்கும் விலாசம் கேட்கும்
வேள்விகள் தொடர வானும் கரையும்
மதங்கள் யாவும் மாசாய்ப் போகும்
கேள்வியின் பதிலும் தூசாய் மாறும்!

Wednesday, October 20, 2010

குழந்தைப் பாடல்கள்

வெள்ளை நிறத்தில் பூனைக்குட்டி
கள்ளமின்றி வந்தது
பள்ளம் மேடு பார்த்துமே
 உள்ளம் தொட்டு நின்றது!

தோட்டத்திலே பூக்களின்
செடிகள் அழகை ரசித்தது
மேயும் எலிகள் பார்த்ததும்
 கவலை கொண்டு அழுதது!

வலைகள் தோண்டி வாழ்ந்திடும்
எலிகள் கண்டு சினந்தது
கலைகள் வளர்த்த தோட்டத்தில்
கண்சிமிட்டி நின்றது!

உற்றுப் பார்த்த பூனையும்
சற்று தூரம் வந்தது
பட்டுப் பூச்சி அழகையும்
பார்த்து நின்று ரசித்தது!




சுவாசித்த சிறகுகளை
 சுற்றி முற்றும் பார்த்தது
சூழ்ந்து நின்று ரசிக்கவும்
வீட்டு நாயை அழைத்தது

எலிகள் தொல்லை சொல்லியும்
பூனை அழுது வழிந்தது
நாயும் அதை நினைத்துமே
நல்ல வழி சொன்னது!

எலிகள் கண்டு பயப்படும்
பூனை என்ன பூனையோ
வெள்ளை நிறம் உனக்குமே
பாழும் நிறம் ஆனதோ!

எனக்கு ஒரு பூனையும்
நண்பனாக இருக்குது
அழைத்து வந்து நானுமே
எலிகள் ஒழித்து வெல்லுவேன்!

மியா.மியா..சொல்லியே
மேலத்தெருவுக்கு வந்தது
குரைக்கும் நாயின் மியாவைக்கேட்டு
பூனை அசந்து நின்றது!

கதையை விளக்கி சொன்னது
உணவுக் கதை அழைத்தது
பூக்கள் நிறைந்த தோட்டத்தை
புன்னகைத்துப் பார்த்தது!

பூவைப்போலும் தன் இனத்தை
புதுமையாகப் பார்த்தது!
நாயைப் பார்த்துப் புன்னகைத்து
நன்றி சொல்லி மகிழ்ந்தது!

தொல்லை தரும் எலிகளை
தோண்டி வலையில் தின்றது
வெள்ளைப் பூனை வலையிலே
வீழ்ந்து வாழ்வில் இணைந்தது!

Tuesday, October 19, 2010

கவிதை

டவுசர் கிழிந்து
டயர் வண்டி ஓட்டியபோது
என்னோடு வரும்
நண்பேன்டாக்களுக்கும்
நட்பின் ஆழம் புரிந்திருந்தது
பால்ய பருவத்திலும்!

பங்கிட்டுக்கொள்வதில்
எப்போதும் பிரச்னை
எழுவதே இல்லை.

பலகையில் எழுதும் பலபமும்
நோட்டில் எழுத பென்சிலும்
நொடியில் வாங்கித்தரும்
வழுக்கை மண்டை வாத்தியாரை
இப்போதும் நினைவிருக்கிறது!

வரதராஜன் என்ற பெயரும்
மனிதில் பதிந்தவையே!
வெள்ளிக்கிழமை தோறும்
விரதம் இருப்பார்.

வித்தியாசம் தெரியாமல்
 அடித்தும் தொலைப்பார்
சாதி இரண்டொழிய
வேறில்லை என்பார்.
அடித்த அடி வலிக்க
நாங்கள் அவரிடமே
சூட்டோடு கேட்டுவிட்டோம்
நீங்கள் எந்த ஜாதி சார்?

அடிக்கும் ஜாதியா?
அடிக்காத ஜாதியா?

வழுக்கைமண்டை வாத்தியார்
மண்டையில் பிரம்பு
பிராண்டிக்கொண்டிருந்தது!

Saturday, October 16, 2010

நெசவு: மின் வெட்டு

நெசவு: மின் வெட்டு

நெசவு: கவிதை

நெசவு: கவிதை

நெசவு: கவிதை

நெசவு: கவிதை

முகநூலில் எழுதியது

NotesMy Notes

  • By Aari Aarison · Thursday, October 7, 2010

     தண்டல்காரனிடம்
    தடியாட்சியும்..
    முடமானவனிடம்
    முடியாட்சியும்..
    குடிப்பவனிடம்
    குடியாட்சியும்..
    இருக்க வேண்டிக் கொண்டனர்
    டாஸ்மாக் கடைக்கு வெளியே
    கியூவில் நிற்கும்
    நுகரும் “புட்டி”ஸ்டுகள்!
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, October 7, 2010
     ஆமை ஒன்னு வீட்டுக்குள்ளே
    வந்துப் புட்டாலே
    விளங்காது என்று சொல்லி
    வீட்டை விற்பாரே!

    குடிபோதையிலே எத்தனையோ
    ஆடவரும் தான்
    வீட்டுக்குள்ளே ஆமைகளாய்
     வாழுகின்றாரே!

    சேரிமனிதன் வீட்டுக்குள்ளே
    வந்துப்புட்டாலே
    தீட்டு வந்து ஒட்டிக்கொள்ளும்
     என்று சொல்வாரே!

    தீட்டுப் பொண்ணு வந்து
    கழுவும் பாத்திரத்திலே
    அரிசிச் சோறும் வெந்துபோகும்
    பண்ணைப் புரத்திலே!

    சேரிக்கொறத்தி வந்துப்புட்ட...
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, October 7, 2010
     ஹலோ சொல்லி
    அழைத்ததும்-
    வணக்கம் சொன்னாய்1
    தமிழின் சிகரத்துக்கு
    தலைசாய்த்து வணங்கி..
    வாழ்த்துச் சொன்னேன்!
    நன்றி தெரிவித்தாய்.
    தொடரட்டும் பாராட்டுக்களின்
    வேள்வி என்றதும்-
    நீ..உன்னை
    அடுத்த பாராட்டுக்கு
    ஆயத்தப்படுத்திக் கொண்டாய்!
    தொடர்வண்டிபோல் செல்லும்
    மகிழ்ச்சியின் தொடர் அடுக்குகளுக்கு
    சாதனையின் மீட்சி மட்டுமே
    சவாலாக்கப்படுகிறது
    தமிழ் நதிகளின் நீரூற்றுகளுக்கு!
    செதுக்...
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, October 7, 2010

     செல்லப்பிள்ளை..சின்னப்பிள்ளை
    பையைப் பாரடா!
    சேதி சொல்லும் உலகமெல்லாம்
    உன் கைக்குள் தானடா!

    கள்ளமின்றி மூளையெல்லாம்
    நமக்கு தானடா!அதை
    கலப்படமா மாத்திப்புட்டான்
    “வெள்ளை” ஆளுடா!

    விவரத்தோடு வேட்டு வைக்க
    கெளம்பி வந்துட்டான்-அவன்
    உலகமயம் என்று சொல்லி
    ஊர நாட்டக் கலக்குறான்

    வெள்ளக்காரன் நாத்தம் போயி
    நாடு மணந்தது-இப்ப
    தொல்லக்காரனாக வந்து
    தொழிலத் தொடங்குறான்!

    இத நாடு செழி...
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, September 30, 2010
     தாயின் கருப்பை
    கிழிந்து போக சிரிக்கிறது
    உலகமயம்.
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, September 30, 2010
     புழுக்கத்தில் மனிதர்கள்..
    காற்றைக் களவாடி பயணிக்கிறது-
    மதத் தேர்.
    View Full Note · ·
  • By Aari Aarison · Thursday, September 30, 2010
     உரசி மீட்டியதும்-
    சுடர்விட்டு சிரித்தது.
    வீசி எறிந்ததில் தீயாகி..
    எரிமலையாய்த் தொடர்கிறது-
    இன்னும்!
    உணர்ச்சியின்..
    பள்ளத்தாக்கெங்கும்..
    அரசியல் வேர்களில்-
    தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது..
    சரம் சரமாய்-
    அணுகுண்டின்..
    அரிசிக் குப்பிகள்!
    மலையின் உச்சியையும்-
    தொடமுடியாத அளவிற்கு!
    View Full Note · ·
  • By Aari Aarison · Sunday, September 26, 2010
     ரதங்களைத் தேடி
    ஓடுகின்றன மதங்கள்...
    இஸங்களோடு-
    விதைக்கப்படுகின்றன..
    நச்சு விதைகள்!
    வதங்களைத்தேடி
    வாழ்வை முடித்துக்கொள்ள..
    தீர்மானிக்கிறது..
    ’முதலின்’ பயணம்.
    இடிகள் வீழ்ந்து கருகிய பூமியில்-
    தொலைந்து போயின..
    வாழ்விடங்கள்..
    மனிதகுலம் இன்னும் ..புதிய விடியலுக்கான
     தேடிக்கொண்டிருக்கிறது

     ‘தொழிலின்’ கஜானவை..!
    View Full Note · ·
  • By Aari Aarison · Sunday, September 19, 2010
    சின்னத்திரையில்..
    சீரியசாய் சொல்லித் தரப்படுகிறது
    அழுகையினை!
    மாமியார் மருமகள்..
    புனிதங்கெட்டு-
    அப்பா அம்மா..
    அனதையாய்த் திரிவதும்..
    அக்கா தங்கை..
    அழுக்காகி அலைவதும்-
    அண்ணன் தம்பி
    அசிங்கமாய்த் திரிவதும்..
    கொழுந்தன் கொழுந்தி-
    கொழுப்பேறி அலைவதும்..
    வீடு முழுக்க..
    விழுங்கிக்கொள்ள முடிகிறது-
    சின்னத்திரையால்!
    சோகமோ துக்கமோ..
    இன்பமோ துன்பமோ..
    ஆறாக ஓடி..
    உப்புக்கண்ணீர் முழுக...
    View Full Note · ·

கவிதை

வாழ்க்கையைத் தேடினேன்
பாலுக்கு அழுதது
குழந்தை!

கசங்கியிருந்தது
காந்தியின் வாழ்க்கை
சுதந்திர (சு)வாசம்

முட்டைக்குள்ளும்
சுவாசித்திருக்கிறது
கரு

மின் வெட்டு

வாழ்க்கை வெளிச்சத்தை
சூரியனில் தேடச் சொல்லி
அடிக்கடி வெட்டுகிறார்கள்!
மின்சாரக் கூடுகள்
எங்கும் புழுக்கம்!
உருத்தெரியாத
காற்று வெளிக்கு
 இறுதி அஞ்சலி!
.எரவானம் தொடங்கி
மேல் வானம் வரையிலும் ..
விழுங்கியே விடுகிறது-
வெப்பத்தை உள்வாங்கி
விரிசல் ஏதுமின்றி
மனிதகுலத்தை
மறத்துப் போக வைக்கிறது
மின்வெட்டு!

பள்ளிக்கூடக் கனவுகள்..

குருவிகள் தலையில்
பனங்காய்கள்!
குற்றத்தைப்
பதிவு செய்த போது..
இறகு முளைத்த-
பறவைகளாய்ப்..
பறந்து திரிகிறது-
மாணவப் பயிர்கள்!
விளைச்சல் நிலமெங்கும்
வீட்டு மனைகள்!
மூளையெங்கும் வெற்றிடங்களாய்
பதறாகிப் போகின்றன..
பள்ளிக்கூடக் கனவுகள்!

சும்மா பாடுங்க..

உனக்குள்ளும் எனக்குள்ளும்
இருக்குது ஒரு பாட்டு!அதை
நினைவில் வைத்துத் தேட வேணும்
நெஞ்சுயர்த்திப் பாடவேணும்!

சாதிமதம் தீண்டாமை
ஆதரித்துப் பேசும்-அந்த
அநாகரீகக் கூட்டங்களை
ஓட வைக்க வேணும்!

மனிதகுலம் மகிழ்ச்சியாக
இருந்திட வேண்டும்!இசை
இனிமையாக பிறப்பெடுத்து
நதியாக வேண்டும்!

புது அவதாரமாகியும்
புனல் அலையாக மாறியும்
இந்தப் பாட்டு உயிராய்ப்
பொறப் பெடுக்க வேணும்!

சந்நிதான மனங்களையும்
வெற்றி கொள்ள வேணும்-இந்த
சம தர்மப் பாட்டும் தான்
கடலாகிப் பொங்கி எழ வேணும்!

சந்நிதானம் எங்கும் தமிழ்
அர்ச்சனைக்கு ஏங்கும்-புது
சாமிகளை உருவாக்க வேணும்
தமிழ்ச் சாமிகளை உருவாக்க வேணும்!

சமஸ்கிருத சாமி யெல்லாம்
துயில் எழுப்ப வேணும்!-தமிழ்
செம்மொழியைக் காதில் ஓதி
பயில வைக்க வேணும்!

மண்ணுக்குள்ளே மண்
விழுந்ததெப்படி-அதை
மாற்றிச் செல்லும் விவசாயம்
 நமக்கெல்லாம் காப்படி!

எத்தனையோ பாட்டுகட்டி
நாமும் தர வேணும்-சம
தர்மப் பாட்டுப் பாடி சமூகத்தை
மாற்றிக் காட்ட வேணும்!

Tuesday, October 12, 2010

ஹைக்கூ

தீ அகோரம்
தீபம் அழகு
கோபம்.

அழித்தாலும் வாழ்கிறது
 பீனிக்ஸ் பறவையாய்
வறுமை.

Monday, October 11, 2010

நிலவை..சூரியனை உடைத்து...

பிரித்துப்பார்..
என்று-
கோஷம் போட்டோம்
பிரித்தார்கள்!

உடைக்காதே என்று
உரக்கக் கத்தினோம்
உடைத்தார்கள்!

மக்களுக்கு ..
வெளிச்ச வாழ்வைக்
கொடு என்று
கோரிக்கை வைத்தோம்!

இருட்டை-
இனாமாகத் தந்தார்கள்!

நிலவை..
சூரியனை..
உடைத்து
வெளிச்சத்தைப்..
பங்கிட்டுத் தரவும்-
வியாக்கியானம் செய்தார்கள்!

விரும்பிய மட்டும்
கிடைக்காமலே
விலகியிருக்கிறது
(எ)இப்பவும் தான்
மின்சாரம்!

ஐந்திணை ரகசியம்

காலச் சக்கரம்
சுழன்று திரிந்தது
கன்னித் தீவெங்கும்
கர்ப்பமானது
குறிஞ்சித்திணை!

யுகங்களாய்
சுவாசித்துக்கொண்டிருக்கிறது
பூமிக்குள்ளும்
காற்றின் வேர்கள்
பசுமை வளர்த்த தாயகமாய்
முல்லைத்திணை!

புசித்த நோய்க்கு
பசிப்பிணி போக்க
சஞ்சீவி தயாரிக்கும்
உற்பத்திக்கூடமானது
வயல்வெளிகள்
மருதத்திணை!

4ல்3பங்கு
நீருலகு இருந்தாலும்
குடிநீர் விலை என்னவோ
பாலையும் மிஞ்சுகிறது
தொடு வானத்தின்
சூட்சுமம்
புரிந்து கொள்ள முடியாமல்
அணைத்துக்கொள்கிறது கடல்
நெய்தல் திணை!

வாழ்விடமற்ற
நோஞ்சான் நோயாளி..
வயோதிகர்கள்..
தேடித்திரிந்தும்
தாகம் தணிக்காது
வாழ்க்கைக்கு அப்பாலும்
விரிந்த நிலமாய்
பாலை!

பஞ்ச பூதங்களின்
சுவாச மண்டலமாய்
எப்போதும் இருக்கிறது
வாழ்வியலோடு
ஐந்திணை!

Tuesday, October 5, 2010

நெசவு

சின்ன இழை
பின்னி வர
பிழைப்பு தேடுது!

நாடா புனிகளுக்குள்
 ஓடி  ஓடி -தறியும்
ஆடை நெய்யுது!

இயல்பான வாலிபத்தை
கசக்கிப் பிழியுது-கண்
 குழிக்குள் போகுது!

கைக்குள்ளும் காலுக்குள்ளும்
இருக்கும் ரகசியம்-அது
நெசவென்னும் தொழிலின்
பரம ரகசியம்!

குழந்தைப் பாடல்

உள்ளுக் குள்ளே
உறங்கிக் கிடக்கும் பாரு1

வெள்ளித் திரையில்
ஓடிவரும் பாரு!

கறுப்பு வெள்ளையாக
ஓடும் படத்திணையும் பாரு!

திறக்காத கண்ணுக்குள்ளே
தொடரும் படம் பாரு!

மறந்து போன கதைகளும்
சுரந்து வரும் பாரு!

உறவுக் கொடி யெல்லாமே
சுற்றி வரும் பாரு!

உயர்திணையோ அஃறிணையோ
உருப்படியாய்ப் பாரு!

சுயசிந்தனையில் கலர்கலரா
ஓடிவரும் பாரு!

எழுதாத கதை யெல்லாம்
படமாகும் பாரு!

பழுதின்றி திரையில் தான்
ஓடி சிரிக்கும் பாரு!

குழந்தைப் பாடல்

* மெழுகு வர்த்தி போலவே
உருகிடு வாரு-கல்வி
அழகைக் கொடுத்தும் தான்
சிறந்திடு வாரு!

உண்மைத் திருக்கோ யிலாக
விளங்கிடு வாரு-கல்வி
நன்மை யாவையும் தான்
சொல்லிடு வாரு!

சொல்லித் தரும் பாடத்திலே
சிறந்திடு வாரு-கல்வி
தரும் சேவையைத் தான்
கூறிடு வாரு!

யாரையுமே கண்மணி போல்
பார்த்திடு வாரு-கல்விப்
பாரை உயர்த்தும் கருவியெனக்
காணச் சொல்வாரு!

மழை தரும் மேகமாக
இருந்தி டுவாரு-கல்வி
இழையில் ஆடை நெய்தே
அணிந்தி டுவாரு!

இரக்க குணம் இருக்கவும்
எண்ணிடு வாரு-கல்வி
அரக்க குணம் அழித்திடுமெனச்
சொல்லிடு வாரு!

பிரம்பெடுத்து அடிக்க மனம்
வெறுத்தி டுவாரு-கல்வி
உரமிட்டு வளர்க்கத் தான்
அன்பை விதைப் பாரு!

ஞானம் சுரக்கும் கண்களைத்
திறந்தி டுவாரு-கல்வி
ஊனமின்றிக் கற்கவும் தான்
உதவி டுவாரு!

ஆசிரியர் என்று சொன்னால்
அறிவு ஊறுமே-கல்வி
வாசித்து சிறப்பித்தால்
வாழ்வும் சிறக்குமே!

குழந்தைப் பாடல்

அன்னாந்து பார்க்கலாம்
ஆசை வானில் சுற்றலாம்.
என்னவென்று கேட்கலாம்
ஏழிசை இடியைக் காணலாம்!

விண்ணையுமே ரசிக்கலாம்
வீணை இசையும் மீட்டலாம்.
கார்குழல் மேகம் கலைவதை
கண்ணிமை சிமிட்டிப் பேசலாம்!

ஆயிரமா யிரம்நட் சத்திரங்கள்
ஆசையில் சுற்றும் முழு நிலவை
பாயிரம் பாடி அழைத்திடும்
பருவ மேகக் கூட்டங்களை!

அன்பு கொண்ட பூமிக்கு
அழுதே நீரைச் சொரிகிறது
கனவு கண்ட வானமும்
காட்சியை ரசித்து மகிழ்கிறது!

குழந்தைப் பாடல்கள்

பூமிக்கு நீயோ
புது விதை!

புரட்டி எடுக்கும்
ம்ழை விதை!

காலம் கனிய
வரும் விதை!

காட்சிக் கதுவும்
கனி விதை!

உலகம் உனக்குள்
ஒரு விதை!

உயிர் வளர்க்கும்
கரு விதை!

அன்பு மனங்கள்
பாகாய் உருகிட..

இன்பம் பெருகிட
வரும் விதை!

இழைபோல் இறங்கி
பூமியில் பெருகி..

தழைத்து ஓங்கும்
உயிர் விதை!

சிறுதுளி பெருதுளி
ஆகும் விதை!

பருவம் தாண்டியும்
தருமே விதை!

சிறுவர் பாடல்

கையில் பிடித்து மகிழலாம்
காலில் உதைத்து ஆடலாம்
பையில் காற்றை நிரப்பியும்
பிஞ்சுக் காலால் உதைக்கலாம்!

மனித வாழ்வில் மூச்சுமே
இருப்பு கொள்ள வைக்குமே
தென்றல் காற்றின் மூச்சுமே
பந்தை உயரப் பார்க்குமே!

புல் செழித்து வளர்ந்திடும்
தரையில் பந்தும் மகிழ்ந்திடும்
கல் செழித்த பூமியிலே
பந்தின் உயிரும் போகிடும்!

வானம் தொடும் பந்தினை
கானம் கூவி அழைக்குது
மந்திக் கூட்டம் யாவையும்
பந்தை உதைத்து மகிழுது!

சூர்ய நிலாப் பந்துமே
அழகு வானில் இருக்குது
ஊனமின்றி ஒளியினை
உலக மெங்கும் பரப்புது!

பந்தின் செயல் பறப்பதே
பாரைச் சுற்றித் திரிவதே
வானப் பந்து என்றுமே
மனித வாழ்வைச் சுற்றுமே!

குழந்தைப் பாடல்கள்

அள்ளித் தரும்
அறிவை யுமே
சேமிக்க வேணும்-அதற்கு

 பள்ளிக் கூடம்
போக வேணும்
பாப்பாவே நீயும்!

கல்விக் கண்ணைத்
திறந்து காட்ட
சொல்லிட வேணும்-அங்கே

காட்சி தெரிய
மகிழ்ச்சி பொங்க
பேசிட வேணும்!

சொல்லிப் புரிய
வைக்கவே தான்
புத்தியும் வேணும்-அதில்

சுத்தத் தங்கம்
சுடர் விடவும்
நெருப்பே வேணும்!

இட்டுக் கட்டிப்
புரிய வைக்க
ஆசான் வேணும்-அதை

மெட்டுக்கூட்டி
இனிமை யாக்க
இயற்கை வேணும்!

குழந்தைப் பாடல்

அன்புப் பயிர் வளர்க்கிறது
ஆசை கொள்ள வைக்கிறது
ஈ யீ என மனதும் மகிழ்கிறது
உயிர் வளர்வதைச் சொல்கிறது
ஊஞ்சல் கட்டி அழைக்கிறது
என்றும் குளிர்ச்சி தருகிறது
ஏங்கும் மனதும் இனிக்கிறது
ஐயமின்றி அழகது தான்
ஒருமை மனதின் ஓவியமாம்
ஓங்கிச் சொல்வோம் உயிரதனை
ஒளஷதமாகும் உடலுக்கு
இஃதே பைந்தமிழ்த் தோட்டமாம்.

Saturday, October 2, 2010

ஹைக்கு கவிதை

*சொட்டும் ரத்தத்தில்
குளிர் காய்ந்தே இருக்கிறது
சாதி அரசியல்.

*காற்றைக்களவாடி
பயணிக்கிறது மதத் தேர்
புழுக்கத்தில் மக்கள்.

தாயின் கருப்பை
கிழிந்துபோக சிரிக்கிறது
உலகமயம்.