Popular Posts

Tuesday, October 5, 2010

நெசவு

சின்ன இழை
பின்னி வர
பிழைப்பு தேடுது!

நாடா புனிகளுக்குள்
 ஓடி  ஓடி -தறியும்
ஆடை நெய்யுது!

இயல்பான வாலிபத்தை
கசக்கிப் பிழியுது-கண்
 குழிக்குள் போகுது!

கைக்குள்ளும் காலுக்குள்ளும்
இருக்கும் ரகசியம்-அது
நெசவென்னும் தொழிலின்
பரம ரகசியம்!

குழந்தைப் பாடல்

உள்ளுக் குள்ளே
உறங்கிக் கிடக்கும் பாரு1

வெள்ளித் திரையில்
ஓடிவரும் பாரு!

கறுப்பு வெள்ளையாக
ஓடும் படத்திணையும் பாரு!

திறக்காத கண்ணுக்குள்ளே
தொடரும் படம் பாரு!

மறந்து போன கதைகளும்
சுரந்து வரும் பாரு!

உறவுக் கொடி யெல்லாமே
சுற்றி வரும் பாரு!

உயர்திணையோ அஃறிணையோ
உருப்படியாய்ப் பாரு!

சுயசிந்தனையில் கலர்கலரா
ஓடிவரும் பாரு!

எழுதாத கதை யெல்லாம்
படமாகும் பாரு!

பழுதின்றி திரையில் தான்
ஓடி சிரிக்கும் பாரு!

குழந்தைப் பாடல்

* மெழுகு வர்த்தி போலவே
உருகிடு வாரு-கல்வி
அழகைக் கொடுத்தும் தான்
சிறந்திடு வாரு!

உண்மைத் திருக்கோ யிலாக
விளங்கிடு வாரு-கல்வி
நன்மை யாவையும் தான்
சொல்லிடு வாரு!

சொல்லித் தரும் பாடத்திலே
சிறந்திடு வாரு-கல்வி
தரும் சேவையைத் தான்
கூறிடு வாரு!

யாரையுமே கண்மணி போல்
பார்த்திடு வாரு-கல்விப்
பாரை உயர்த்தும் கருவியெனக்
காணச் சொல்வாரு!

மழை தரும் மேகமாக
இருந்தி டுவாரு-கல்வி
இழையில் ஆடை நெய்தே
அணிந்தி டுவாரு!

இரக்க குணம் இருக்கவும்
எண்ணிடு வாரு-கல்வி
அரக்க குணம் அழித்திடுமெனச்
சொல்லிடு வாரு!

பிரம்பெடுத்து அடிக்க மனம்
வெறுத்தி டுவாரு-கல்வி
உரமிட்டு வளர்க்கத் தான்
அன்பை விதைப் பாரு!

ஞானம் சுரக்கும் கண்களைத்
திறந்தி டுவாரு-கல்வி
ஊனமின்றிக் கற்கவும் தான்
உதவி டுவாரு!

ஆசிரியர் என்று சொன்னால்
அறிவு ஊறுமே-கல்வி
வாசித்து சிறப்பித்தால்
வாழ்வும் சிறக்குமே!

குழந்தைப் பாடல்

அன்னாந்து பார்க்கலாம்
ஆசை வானில் சுற்றலாம்.
என்னவென்று கேட்கலாம்
ஏழிசை இடியைக் காணலாம்!

விண்ணையுமே ரசிக்கலாம்
வீணை இசையும் மீட்டலாம்.
கார்குழல் மேகம் கலைவதை
கண்ணிமை சிமிட்டிப் பேசலாம்!

ஆயிரமா யிரம்நட் சத்திரங்கள்
ஆசையில் சுற்றும் முழு நிலவை
பாயிரம் பாடி அழைத்திடும்
பருவ மேகக் கூட்டங்களை!

அன்பு கொண்ட பூமிக்கு
அழுதே நீரைச் சொரிகிறது
கனவு கண்ட வானமும்
காட்சியை ரசித்து மகிழ்கிறது!

குழந்தைப் பாடல்கள்

பூமிக்கு நீயோ
புது விதை!

புரட்டி எடுக்கும்
ம்ழை விதை!

காலம் கனிய
வரும் விதை!

காட்சிக் கதுவும்
கனி விதை!

உலகம் உனக்குள்
ஒரு விதை!

உயிர் வளர்க்கும்
கரு விதை!

அன்பு மனங்கள்
பாகாய் உருகிட..

இன்பம் பெருகிட
வரும் விதை!

இழைபோல் இறங்கி
பூமியில் பெருகி..

தழைத்து ஓங்கும்
உயிர் விதை!

சிறுதுளி பெருதுளி
ஆகும் விதை!

பருவம் தாண்டியும்
தருமே விதை!

சிறுவர் பாடல்

கையில் பிடித்து மகிழலாம்
காலில் உதைத்து ஆடலாம்
பையில் காற்றை நிரப்பியும்
பிஞ்சுக் காலால் உதைக்கலாம்!

மனித வாழ்வில் மூச்சுமே
இருப்பு கொள்ள வைக்குமே
தென்றல் காற்றின் மூச்சுமே
பந்தை உயரப் பார்க்குமே!

புல் செழித்து வளர்ந்திடும்
தரையில் பந்தும் மகிழ்ந்திடும்
கல் செழித்த பூமியிலே
பந்தின் உயிரும் போகிடும்!

வானம் தொடும் பந்தினை
கானம் கூவி அழைக்குது
மந்திக் கூட்டம் யாவையும்
பந்தை உதைத்து மகிழுது!

சூர்ய நிலாப் பந்துமே
அழகு வானில் இருக்குது
ஊனமின்றி ஒளியினை
உலக மெங்கும் பரப்புது!

பந்தின் செயல் பறப்பதே
பாரைச் சுற்றித் திரிவதே
வானப் பந்து என்றுமே
மனித வாழ்வைச் சுற்றுமே!

குழந்தைப் பாடல்கள்

அள்ளித் தரும்
அறிவை யுமே
சேமிக்க வேணும்-அதற்கு

 பள்ளிக் கூடம்
போக வேணும்
பாப்பாவே நீயும்!

கல்விக் கண்ணைத்
திறந்து காட்ட
சொல்லிட வேணும்-அங்கே

காட்சி தெரிய
மகிழ்ச்சி பொங்க
பேசிட வேணும்!

சொல்லிப் புரிய
வைக்கவே தான்
புத்தியும் வேணும்-அதில்

சுத்தத் தங்கம்
சுடர் விடவும்
நெருப்பே வேணும்!

இட்டுக் கட்டிப்
புரிய வைக்க
ஆசான் வேணும்-அதை

மெட்டுக்கூட்டி
இனிமை யாக்க
இயற்கை வேணும்!

குழந்தைப் பாடல்

அன்புப் பயிர் வளர்க்கிறது
ஆசை கொள்ள வைக்கிறது
ஈ யீ என மனதும் மகிழ்கிறது
உயிர் வளர்வதைச் சொல்கிறது
ஊஞ்சல் கட்டி அழைக்கிறது
என்றும் குளிர்ச்சி தருகிறது
ஏங்கும் மனதும் இனிக்கிறது
ஐயமின்றி அழகது தான்
ஒருமை மனதின் ஓவியமாம்
ஓங்கிச் சொல்வோம் உயிரதனை
ஒளஷதமாகும் உடலுக்கு
இஃதே பைந்தமிழ்த் தோட்டமாம்.