Popular Posts

Friday, October 29, 2010

புரிசை கூத்து திருவிழா-2010

புரிசை கூத்துத் திருவிழா-2010

புரிசை கூத்துத் திருவிழா-2010

கொம்பிலே பழம் பழுத்துத்
தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம் மயங்கி
பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம் போட்டு
ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திகிட்டுப் பாடுறதும்
கலை..கலை..கலை!
                                    பட்டுக்கோட்டையார்.

      மனித சமுதாயத்தின் கூட்டு முயற்சியாகப் பரிணமித்த நாட்டுப்புறக் கலைகள் பழமையின்,பண்பாட்டின் சின்னமாக விளங்கி மனித குலத்தின் முகம் பார்க்கும் கண்ணாடியாக விளங்குகிறது.பல்வேறு நாட்டுப்புறக் கலைவடிவங்களில் இன்னமும் கிராமங்கள் தோறும் வாழவைத்துக் கொண்டிருக்கும் கூத்துக் கலைக்கு தமிழகத்தின் நுழைவு வாயிலாக உள்ளது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையில் இருக்கும் புரிசை எனும் கிராமம் ஆகும்.
          கூத்துக் கலையை உலகத்தின் பல முனைகளுக்கு சென்று சொல்லியும்,நடத்தியும் காட்டி இக்கலைக்குப் பெருமை சேர்த்த புரிசை கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் அவர்களின்  7-ம் ஆண்டு நினைவாக அக்டோபர்22,23,24-2010 ஆகிய 3 நாட்களும் புரிசை மண்ணில் கலை வாசம் மணக்க மண் வாசம் மாறிய நாட்களாகும்.ஆண்டு தோறும் நடக்கும் இக்கூத்துத் திருவிழாவில் அந்நிய நாட்டினர்,திரைக் கலைஞர்கள்,எழுத்தாளர்கள்,பல்வேறு கூத்து மன்றங்கள்,குழந்தைகள் முதல் அறிஞர்கள் வரை கலந்து கொண்டு சீரிளமையாக இவ்விழாவை சிறப்பித்து வருகின்றனர்.விழா எனும் திறந்த வாசல் வழியே தான் நம் நாட்டு மக்களை அறிந்து கொள்ளமுடியும்.கலைகளின் வளர்ச்சிக்கே விழாக்கள் தான் மூல காரணம் எனும் தாகூரின் வார்த்தைகள் கூத்துக்கலை நிகழ்த்தும் புரிசை மண்ணுக்குப் பொருத்தமானதே!
              வைகறை இசைக்குழுவின் கிராமிய மணம் கமழும் பாடல்களோடு தொடங்கிய நிகழ்வு 3 நாட்களும் பல்வேறு நாடகங்களின் களமானது.சத்யலீலா,கைசிகபுராணம்,கி.ரா.கொழம்பு,லவ் பண்ணுங்கோ சார்,அனுமன் தூது,அரவான் களப்பலி,குதிரைமுட்டை,சென்னைக்கலைக்குழுவின் கொக்கரிப்பு,கோவில்பட்டி மணல் மகுடி நாடகக்குழுவின் மிருகவிதூஷகம்,சுந்தரிகல்யாணமெனும் கூத்துக்களும்,நவீன,வீதி நாடகங்களும்,மக்கள் திரளை கலக்கவும்,சிரிக்கவும் வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.
              பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் விளக்கெண்ணெய் தடவிய மரக்கம்பத்தில் சிறுவர் முதல் இளைஞர்கள் வரையிலும் ஏறி உச்சத்தில் ஆடிய ஆட்டங்கள் அனைவரையும் அசரவைத்தது.கயிற்றில் நடந்து செல்லும் சாகஸத்திலும் இந்த சாகஸம் சாதனை என்றே சொல்லலாம்.மல்லர்கம்பத்தில் ஏறிவிளையாடிய அந்தக் கண்மணிகளைப் பாராட்டியேயாக வேண்டும்.லிம்போகேசவனின் தீ நடனமும்,நாலு கால் நடனமும் நிகழ்ச்சிக்குச் சூடேற்றியது.
    கோயிலுக்கான குறியீடாக விழாக்கள் இருந்தன என்றால் கூத்துக்கலையின் வளர்ப்புப் பண்ணையாக புரிசை விளங்குகிறது எனலாம்.சிறுவர் முதல் பெரியவர்கள்,பேராசிரியர்கள்,படித்தவர்கள்,படிக்காதவர்களென அனைவருக்கும் கூத்துக்கலை சொல்லித்தரும் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் படித்து வளர்ந்து வரும் கலைஞர்கள் ஏராளம்.நெஞ்சை அள்ளி நெகிழ்ச்சியூட்டிய இவ்விழாவில் கூத்தோடு கரைந்துபோன மூத்த தெருக்கூத்துக் கலைஞர் பாவலர் ஓம் முத்துமாரி அவர்களுக்கு கண்ணப்பதம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கூத்துக்கலையை உயர்த்திப் பிடித்திருக்கிறது புரிசை மண்!இதோடன்றி சங்கீத நாடக அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற கலைஞர்கள் மு.பழனி,நெல்லை மணிகண்டன் ஆகியோரையும் பாராட்டி கெளரவித்தது.
                உலகமயம் எந்த நாட்டுக்கும் பொன்னாபரணமல்ல.அலுமினியப் பிச்சைப் பாத்திரம் தான் என்பதை ஓங்கி அறைந்தன நாடகங்கள்.இந்திய மண்ணுக்கான எழில் வளம்,கலை வளம்,இயற்கை மற்றும் செல்வ வளங்களையும்சுண்டி இழுக்கும்,சுரண்டும் கொள்கையாகவே இருக்கிறது என்பதையும்,அதற்கு அகில உலக முதலாளிகள் சங்கம் எடுபிடியாகி தேசத்திற்கு செய்யும் துரோகம் பாமர மக்களையும் சிந்திக்க வைத்தது.உலகமயத்திற்கு எதிராக மக்களின் ஆற்றலை ஒன்று திரட்ட வேண்டிய அவசியத்தையும் நெத்தியடியாகச் சொன்னது கொக்கரிப்பு!மதங்கள் எதுவும் மனிதர்களுக்குச் சோறு போடாது என்பதை சத்யலீலா நாடகமும்,தாய் மண் அழிந்து வருவதை எச்சரித்துச்  சொன்ன மிருக விதூஷகம் தேசத்தின் சுதந்திரக்காற்றுக்கு வந்த ஆபத்தினை அழுத்தமாய்ப் பதிய வைத்தது.கோயில் விழாக்களில் முழங்கி வந்த கலைகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியவரும் அதை நாடறியச் செய்தவருமான கலவாணர் என்.எஸ்.கே வழியில் சமூகத்திற்கான நாடகங்களை  மக்களுக்குச் சொல்லி சிந்திக்க வைக்கும் புரிசை கண்ணப்ப தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம்,மற்றும்தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
        கலாச்சார,பண்பாட்டு ஒருமைப்பாட்டுணர்வைக் கூத்துகலை மூலம் மனித குலத்துக்குச் சொல்லும் புரிசை மண்ணில் கூத்துக்கலை கற்க அனைவருக்கும் வாய்ப்புள்ளதை இன்னும் அதிகம் பேர் அறியாமலே இருக்கிறார்கள் என்பதும் வியப்பூட்டும் செய்தியாகவே உள்ளது .3 நாட்களும் கலைத்தவத்தோடு இருந்த புரிசை மண் சுந்தரி கல்யாணத்தை முடித்தே தவத்தைக் கலைத்துக் கொண்டது.இந்த 3 நாள் கூத்து விழா கற்றுத்தந்ததும், சொல்லித்தந்ததும் ஏராளம்..ஏராளம்!பழமையின் அடிச்சுவட்டிலிருந்து பூட்ஸ் கால்கள் வரையிலும் கற்றுக்கொள்ளவேண்டிய நாகரீகங்களும்,அடவுகளும்,அதிசயங்களும் நம் அனைவரின் மூளையிலும் இன்னும் பிராண்டிக் கொண்டே இருக்கின்றன.விழா குறித்து சுபோ ஜெயம் சொல்வதற்கு முன் இக்கூத்து விழாவை ஆண்டு தோறும் சாத்தியமாக்கிவரும் கூத்து இயக்கவாதிகளும் கலஞர்களுமான புரிசை கண்ணப்பசம்பந்தன்,கண்ணப்ப காசி,சங்கர் ஆகியோரின் பெரும் பங்கை மறக்க முடியாது.பாராட்டியேயாக வேண்டும்.
            கூத்துகலைக்கோர் குற்றாலமாக இருக்கும் புரிசை மண்ணில் ஆண்டு தோறும் நடக்கும் நீர்வீழ்ச்சித்திருவிழாவில் எங்கிருந்தும் கலைப்பறைவைகள் வந்து,தங்கி,சிறகு விரித்து ஆடும் நடனங்களும்,நாட்டியங்களும்,அடவுகளும் பார்க்கக் கோடி கண்கள் வேண்டும் தான்!இறுதியாக..
                 “கூத்துத் தவத்தில்-இவர்கள்
காத்திரமானவர்கள்-புரிசை இவர்களை
அடைகாத்து வைத்திருக்கிறது,
கனவை நனவாக்கும் புரிசை மண்ணுக்கு
நாமும் கலைஞர்கள் அனைவரும் தோள் கொடுப்போம்!”
    கூத்துப் பல்கலைக்கழகம் ஒன்று புரிசையில் துவக்க தமிழக அரசை வலியுறுத்திக் கோரிக்கையும் வைப்போம்!
.