Popular Posts

Sunday, November 14, 2010

திண்ணை-82,கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ நூல் வெளியீடு

வந்தவாசி,நவம்பர்13.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திண்ணை-82 நிகழ்வு இன்று மாலை வந்தவாசி ஸ்ரீராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’நூல் வெளியீட்டு விழாவாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பூங்குயில் சிவகுமார் தலைமை தாங்கினார்.ந.இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
          கவிஞர் ஆரிசனின் ‘வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூலினை முனைவர் பாலரமணி,நிகழ்ச்சி நிர்வாகி சென்னைத்தொலைக்காட்சி அவர்கள் வெளியிட கவிஞரும்,எழுத்தாளருமான பெரணமல்லுர் சேகரன் பெற்றுக்கொண்டார்.நூல் குறித்தும், இக்கால இலக்கியம் குறித்தும் கவிஞர் ஜீவி மாநிலத்துனைத்தலைவர் தமுஎகச, பேசினார்.கவிஞரும் மா திரைப்பட உதவி இயக்குனரும், மின் இலக்கியப்பூங்கா மாநில பொதுச்செயலாளருமான தமிழியலன்,வந்தவாசி கெளரவத்தலைவர் பொறிஞர் பூ.காளிமுத்து,குழந்தை எழுத்தாளர் இரா.மனோன்மணி,அ.அண்ணாமலை தமுஎகச மாவட்டப் பொருளாளர்,தொழிலதிபர்கள் இரா.சிவக்குமார்,அ.ஜ.இஷாக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.கவிஞர் ஆரிசன் ஏற்புரை வழங்கினார்.தமிழ்ராசா நன்றி கூறினார்.
    நூல் குறித்து கவிஞர் ஜீவி நிகழ்த்திய இலக்கிய உரையிலிருந்து.....
-------------------------------------------------------------------------------------------------
               திண்ணைகளை இடித்துவிட்டு வரவேற்பறைகளைக் கட்டிக்கொண்டிருக்கும் இந்த வேலையிலும்,தொலைக்காட்சிப்பெட்டியில் தொலைந்து போகிற மக்களை (இந்த வந்தவாசி திண்ணையில், தமுஎகச அரங்கு நிறைய) கவிஞர் ஆரிசனின்  ’வேட்கையின் நிழல்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மக்கள் திரளோடு நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.காலையில் கைது/மாலையில் விடுதலை/ஞாயிற்றுக்கிழமைத்தமிழன் என்று ஒரு புதுக்கவிஞன் பேசுகிறான்.1940ல் எழுத்து இயக்கத்தாலும்,1970களில்வானம்பாடி இயக்கத்தாலும்,1980களில் மக்கள் கவிஞர்களாலும் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு வரும் புதுக்கவிதைகள் பல்வேறு தளங்களில் வெளிப்பட்டு வருகிறது.கவிதை ரசிகர்கள் பல அடுக்குகளில் இருக்கிறார்கள்.இந்நிலையில் உழைக்கும் மக்களின் நம்பிக்கை வெளிச்ச விதைகளாக ஆரிசனின் கவிதைகள் இருக்கின்றன.புதிய பொருளாதாரக் கொள்கைகளில் குறைந்து போயிருக்கிற மனித நேயம்,மதவெறியால் நடக்கிறபடுகொலைகள்,பாதகச் செயல்கள் இவற்றுக்கிடையேதான் ஆரிசனின் கவிதைகள் பரிணாமம் பெறுகின்றன.’மதம் குலைத்துப் போடுகிறது வானவில்லின் ஒற்றுமையை’என்று சரியாக கவிஞர் ஆரிசன் தனது வேட்கையின் நிழலில் பதிவு செய்திருக்கிறார்.தமுஎகசஎனும் பிரம்மாண்டமான இலக்கிய அமைப்பின் விரிந்து பரந்த  மேடைகளில் பல கவிஞர்களும், படைப்பாளிகளும்,கலைஞர்களும் அறிமுகமாகி பல்வேறு வியக்கத்தக்க சாதனைகளை செய்து வருகிறார்கள்.பாரதி,பாரதிதாசன்,பட்டுக்கோட்டை தொடங்கி இப்போது எழுதுகிற புதுக்கவிஞர்கள் வரை பகிர்ந்து கொள்ளும் மேடையாக தமுஎகச விளங்கி வருகிறது.ஓட்டு வீடுகள் காங்கிரீட் வீடுகளாகவும்,கைவிசிறிகள்,ஃபேன்,ஏர்கூலர்,ஏசி என மாற்றம் பெறுகிறது.கரி படிந்த சமையலறையில் முன்பு அம்மாக்கள் சமைத்தார்கள்.இப்போதோ டைல்ஸ்பதித்த அழகிய சமையலறையில் பெண்கள் சமைக்கிறார்கள்.வீடுகள் தோறும் புறத்தோற்றம் மாறியிருக்கிறதேயொழிய அதில் வசிக்கும் பெண்களின் மன வெட்கை குறையவில்லை.’ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்’எனும் பாரதி வரிகளை வழிமொழிகிற கவிதைகளை கவிஞர்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும்.
                               எதையும்- எல்லாப் பொருட்களில் இருந்து பலரும் பார்க்காத,பலருக்கும் தெரியாத நுட்பத்தைக் கண்டறிந்து சொல்பவனே கவிஞனாவான்.இப்படி எழுதும் கவிதைகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும்.இந்த வரலாற்றை நேக்கிக் கவிஞர்கள் பயணிக்க வேண்டும் இதுமட்டுமின்றி .படைப்பை மட்டுமல்ல படைப்பாளியை உருவாக்குகிற மனோபாவம் கவிஞர்களுக்கு வேண்டும்.அது இயல்பாகவே கவிஞர் ஆரிசனுக்கு வாய்த்திருக்கிறது.படைப்பாளியின் படைப்பு மனத்தை அங்கீகரிக்க குடும்பச்சூழல்,சமூகச்சூழல் அமைகிற போது தான் ஒரு கவிஞனோ,படைப்பாளியோ உச்சம் பெறுகிறான்.இதன்றி விட்டு விட்டுப் போன பின்னும் விரல் தொட்டு அழைத்து நம்மோடு ஒரு ஞாபக யுத்தம் நடத்துவது தான் கவிதை! அத்தகைய கவிதைகளை,கவிஞர்களை உருவாக்குவதற்கு அரங்கம் நிறைந்த ரசிகர்களோடு விளங்கும்  இந்தத் திண்ணை நிகழ்வுகள் நம்பிக்கையூட்டுகிறது.பல்வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருக்கிற கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கவும்,சமூக அக்கறையோடு விவாதிக்கவும் இந்தத் திண்ணை மேலும் மேலும் விரிவடையட்டும்.உங்கள் வந்தவாசி ஊரே அதற்கு சாட்சியாக விளங்கட்டும்.தமுஎகச வந்தவாசி கிளைக்கும், நூல் வெளியிட்ட கவிஞர் ஆரிசனுக்கும்,கிளை நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comment: