Popular Posts

Saturday, October 30, 2010

சும்மா பாடுங்க..

அன்பு கொண்ட மனிதருக்கு
உடம்பில் கொம்பு முளைக்குதா?

ஆசை கொண்டு பேசும் போது
காசு வந்து குவியுதா?

சந்தையிலே சரக்கு வந்து
மந்தையாக இருக்குதா?

சாதிமதம் பார்க்காமத் தான்
வாங்கிப் போக முடியுதா?

என்பு போர்த்த உடலுக்குள்ளே
 குறை  இருக்கு தெரியுதா?
.........................................................
பழகிச் சொல்லும் போது தானே
பகையும் வந்து சேருது?

ஊனமெல்லாம் உடலில் இருந்து
மனது நோக வைக்குது?

தானம் கொடுத்து வாழ்ந்த
நமது பரம்பரையும் அழுவுது?

சுயநலத்தில் வாழ்வும் தான்
இருந்து கொண்டு துடிக்குது?

பொதுநலத்தில் புதிய வாழ்வு
விடியவும் தான் ஏங்குது?

சுயநலமா? பொதுநலமா?
எந்தநலம் தெரியலே?

சமூகத்தின் விடுதலைக்கு
சத்தியந்தான் பொதுநிலை?
..............................................................
உலகமயம் எதிர்த்து நிற்க
மார்க்சியம் தான் கடைநிலை?

புரிந்து கொண்டால் நமக்கில்லை
வாழ்க்கையிலே இடைநிலை?

வறுமை எனும் பேய் ஒழிய
சமத்துவமே விடுதலை?

பேதமற்று வாழ்ந்திடத்தான்
பாதை மெல்ல மாறணும்?

நமக்கு....
எதுவும் சாத்தியமே என்றுசொல்லி
வாழும் வாழ்க்கை முதல் நிலை?

                                        

குழந்தைப் பாடல்

சின்ன விதை விதைத்துமே
பெரிய மரத்தைப் பார்க்கலாம்
மண்ணுக்குரிய தரத்திலே
மரத்தின் செழிப்பை ரசிக்கலாம்!

நட்டு வைத்த விதையிலும்
நல்ல செடியும் முளைக்கலாம்
 கெட்டுப் போன மண்ணிலும்
விதையும் கருகி சாகலாம்! 

பச்சைநிறத்தில் பாசமும்
இச்சை கொள்ள வைக்குமே
மொட்டுப் பூவும் சிரித்துமே
மனதில் மகிழ்ச்சி பூக்குமே!

வானம் மழையைத் தூவிட
கானம் கூவி அழைக்குது
விலங்குக் கூட்டம் யாவையும்
வெளியில் வந்து திரியுது!

மனது மட்டும் இருக்கணும்
முடிந்த மட்டும் வளர்க்கணும்
கனவு வென்று சிரித்திட
நனவுக் காடும் மலரணும்!

மேகம் சிரித்து வாழவும் 
காடும் செழித்து வளரணும்
தாகம் தீர்க்க உதவிடும்
தண்ணீர் அதுவும்  தந்திடும்!

குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியும்
குழந்தை வளர்ப்பில் நிச்சயம்
உலக வாழ்வின் மகிழ்ச்சியும்
உயிர்க் காடுகளில் சாத்தியம்!

மரம் வளர்த்து வாழ்ந்துமே
மனித குலத்தை நேசிப்போம்
மறம் வளர்த்து வாழவும்
அன்னை பூமியை வாசிப்போம்!

குழந்தைப் பாடல்

கலைஞன் என்ற பெயரிலே

கல்லை வணங்க வைத்திடும்

அரிய கலையைச் செய்திடும்

 அழகு சிற்பி நான் தானே!


அன்பு மழையில் நனைந்தாலே

அழகு சிலையும் பிறந்திடும்

கனவு கண்டு வடித்திடும்

சிலையும் நனவா கிடும்!


வலிகள் யாவும் புன்னகை

அதற்கு உளிகலுமே பேரிகை

களிபொங்கும் வாழ்விலே

கலையும் நிலைத்து நிற்குமே!


கண் திறந்த பின்னரே

சிலையின் அழகு சிரித்திடும்

பொன்ன கையும்  இன்றியே

புன்னகையும் பிறந்திடும்!


கல்லும் சிலையான பின்

கண்டு வணங்கி சிரிக்கிறேன்

மெல்ல மெல்ல சிற்பி நான்

சிலைகள் கண்டு ரசிக்கிறேன்!