சின்ன விதை விதைத்துமே
பெரிய மரத்தைப் பார்க்கலாம்
மண்ணுக்குரிய தரத்திலே
மரத்தின் செழிப்பை ரசிக்கலாம்!
நட்டு வைத்த விதையிலும்
நல்ல செடியும் முளைக்கலாம்
கெட்டுப் போன மண்ணிலும்
விதையும் கருகி சாகலாம்!
பச்சைநிறத்தில் பாசமும்
இச்சை கொள்ள வைக்குமே
மொட்டுப் பூவும் சிரித்துமே
மனதில் மகிழ்ச்சி பூக்குமே!
வானம் மழையைத் தூவிட
கானம் கூவி அழைக்குது
விலங்குக் கூட்டம் யாவையும்
வெளியில் வந்து திரியுது!
மனது மட்டும் இருக்கணும்
முடிந்த மட்டும் வளர்க்கணும்
கனவு வென்று சிரித்திட
நனவுக் காடும் மலரணும்!
மேகம் சிரித்து வாழவும்
காடும் செழித்து வளரணும்
தாகம் தீர்க்க உதவிடும்
தண்ணீர் அதுவும் தந்திடும்!
குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியும்
குழந்தை வளர்ப்பில் நிச்சயம்
உலக வாழ்வின் மகிழ்ச்சியும்
உயிர்க் காடுகளில் சாத்தியம்!
மரம் வளர்த்து வாழ்ந்துமே
மனித குலத்தை நேசிப்போம்
மறம் வளர்த்து வாழவும்
அன்னை பூமியை வாசிப்போம்!
Saturday, October 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment